Our Feeds


Saturday, March 8, 2025

Zameera

பார்வைக் குறைபாடு உள்ள பெண்கள் போராட்டத்திற்கு பாராளுமன்றம் உறுதுணையாக இருக்கும்


 பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் என  பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.


2025ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் இன்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை பார்வைக் குறைபாடுள்ள மக்கள் சங்கத்தின், பார்வைக் குறைபாடுள்ள பெண் ஒன்றியத்தின் கொடி தினத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், பார்வைக் குறைபாடு உட்பட இயலாமை உடைய பெண்கள் தமது தொழில்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் நாளாந்தம் போராடிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். சமூகம் இயலாமைக்கு உட்பட்டிருப்பதால் இவ்வாறான பெண்களுக்குப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த நிலைமையைச் சரியாக அடையாளம் கண்டு இதற்காக நடவடிக்கை எடுக்கப் பாராளுமன்றம் தலையீடு செய்யும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் இலங்கை பார்வைக் குறைபாடுள்ள மக்கள் சங்கத்தின், பார்வைக் குறைபாடுள்ள பெண் ஒன்றியத்தின் உறுப்பினர்களினால் கௌரவ பிரதமர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு 2025 சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கொடி அணிவிக்கப்பட்டது.


பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா போல்ராஜ்,  பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த சில்வா, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்கத் திணைக்களப் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, இலங்கை பார்வைக் குறைபாடுள்ள மக்கள் சங்கத்தின் தலைவர் எச்.ஜே.நில்மினி, பார்வைக் குறைபாடுள்ள பெண் ஒன்றியத்தின் தலைவர் ஷாரிகா ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »