கிழக்கில் அடிப்படைவாதம் என்ற போர்வையில் முஸ்லிம்
சமூகத்தின் மீது பழி சுமத்த பல தீய சக்திகள் முயற்சிக்கலாம் எனவும் அது தொடர்பான கூற்றுக்களின் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி நிசாம்காரியப்பர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் தெரிவித்துள்ள கூற்றுக்கள் தொடர்பாக இன்று (நேற்று 05) தேசிய பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளதாகவும் இது தொடர்பான உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை பிரதேசத்தில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் எனவும் அதனால் உளவுத்துறையின் கண்காணிப்புக்களை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கூற்றினால் கல்முனைப் பிரதேச மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூற்றுக்கள் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அமைப்புக்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம், ஜம் இய்யதுல் உலமா சபை உட்பட இஸ்லாமிய அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளார்கள். எமது மக்கள் இதுபோன்ற வித்தியாசமான போக்குகளைக் கொண்ட குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள்? என்பதையும் அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.
எனவே, புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் சட்டத்துக்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்தார்.