Our Feeds


Thursday, March 6, 2025

Sri Lanka

முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கிடையில் சந்திப்பு!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று  புதன்கிழமை (5) கொழும்பு பிளவர் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன், செயலாளர் பிரபாத் சுகததாச, பொருளாளர் பண்டார வரகாகொட மற்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குழு இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், அரசாங்க மருத்துவர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் பொது நிர்வாக அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சமரதுங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரச வைத்தியர்களின் சம்பளம், மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு, விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழில் புரிவதற்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது 'உங்களைப் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இந்த நேரத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் அது சிறப்பானது.' என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் குறிப்பிட்டுள்ளது.

'வேண்டாம். நான் தற்போது ஓய்வெடுக்கின்றேன். ஆனால் உங்களுக்குத் தேவையான எந்தவொரு ஆதரவையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »