Our Feeds


Saturday, March 8, 2025

Sri Lanka

விரைவில் பதவி விலகி பெண் பிரதிநிதிக்கு சந்தர்ப்பம் வழங்குவேன் - அச்சுனா எம்.பி!


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா  செய்து அந்த பதவியை  பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன் என்று  யாழ் மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08)  நடைபெற்ற  2025ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின்    மகளிர் மற்றும்  சிறுவர் அலுவல்கள்  மீதான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே  பெண்களை  துணிகரமாக உலகுக்கு வெளிக்காட்டியது. சுதந்திர பறவைகள் என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பில்  பெண்களை எமது தேசிய தலைவர் இணைத்துக் கொண்டார். ஆகவே  எமது தேசிய தலைவரே பெண்களை முழு உலகுக்கும்  துணிச்சல்மிக்க பாத்திரமாக  வெளிப்படுத்தினார்.

இசைப்பிரியா படுகொலை,  பாலச்சந்திரன் படுகொலை மற்றும் கிருசாந்தி படுகொலைக்கு  நீதியை பெற்றுக்கொடுக்க  முறையான விசாரணைகளை மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனை தமிழ் மண் நம்பாது ஏனெனில் இவை வெறும் அரசியல் வாக்குறுதிகள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

2022 ஆம் ஆண்டு இந்த நாட்டில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையின் போது  சிங்கள மற்றும் தமிழ் தலைவர்கள் எமது தேசிய  தலைவரை நினைவுப்படுத்தினார்கள் என்பதை இதன்போது குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

இந்த நாட்டில் பெண்களுக்கு  முறையான அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு காணப்படுகிறதா என்பது  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எமது தேசியத் தலைவரின் காலத்தில் பெண்கள்  இரவு 12 மணிக்கு  கூட சுதந்திரமாக  வெளியில்  செல்லும் நிலை காணப்பட்டது.

ஆனால் தற்போது  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகலில் கூட வெளியில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.பெண்களுக்கு நான் மதிப்பளிப்பேன். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்து அந்த பதவியை  பெண் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவேன்.

இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள்  வாழ்கிறார்கள். ஆனால் இந்த அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதிகள்  கூட இல்லை. அதேபோல் கிளின் ஸ்ரீ லங்கா  செயலணியில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூட இல்லை இவ்வாறான நிலையில் எவ்வாறு  தேசிய  நல்லிணக்கத்தை  கட்டியெழுப்ப முடியும்.

வைத்தியர்களின் சம்பளம் தொடர்பில் மாத்திரமே பேசப்படுகிறது. தாதியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களுக்கான சேவை வசதிகள் பற்றி பேசப்படுதில்லை.

வடக்கு வைத்தியசாலைகளில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.அவற்றுக்கான தீர்வுகள்  வரவு செலவுத் திட்டத்தில்  குறிப்பிடப்படவில்லை. போலியான வாக்குறுதிகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் வைத்தியசாலையில் சிந்துஜா என்ற இளம் தாய் மரணம், சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட  சம்பவம் ஆகியவற்றுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. பெருந்தோட்ட மக்கள்  தொடர்பில் விசேடமாக குறிப்பிட வேண்டும். மலையக பெண்கள்  கடுமையான  நிலையில் தான் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களின் சம்பளம் மற்றும்  அடிப்படை வசதிகள் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் உறுதியாக  ஏதும் குறிப்பிடப்படவில்லை.மாறாக  அவர்களை தோட்ட நிர்வாகங்களுக்கு பொறுப்பாக்கும் பரிந்துரைகள் மாத்திரமே வரவு செலவுத்  திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »