பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டே அரசாங்கம் கடந்த அரசாங்கம் தொடர்பில் பட்டியல் வெளியிடுகிறது. பொது இடத்தில் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி ரத்நாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் கடந்த அரசாங்கங்கள் மீதான வெறுப்பு ஆகிய இரண்டையும் பிரதான கொள்கையாக முன்னிலைப்படுத்தி தேர்தல் காலத்தில் செயற்பட்டது. மக்களை தவறாக வழிநடத்தியது. சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்து மக்களும் மக்களுக்கு எவ்விதத்திலும் சேவையாற்றாதவர்களை பொதுத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். ஆட்சியதிகாரத்தை முழுமையாக ஒப்படைத்தார்கள்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்விதத்திலும் அரசாங்கம் தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை. மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக கடந்த அரசாங்கங்கள் மீதும், 75 ஆண்டுகால அரசியலையும் அரசாங்கம் விமர்சித்துக்கொண்டிருக்கிறது.
அரகலயவின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை மற்றும் அதற்கு வழங்கப்பட்ட நட்டஈடு பற்றி அரசாங்கம் பேசுகிறது. மக்கள் விடுதலை முன்னணி தான் எமது வீடுகளுக்கு தீ வைத்தது. பெற்றுக்கொண்ட நட்டஈடு பற்றி குறிப்பிடப்படுகிறதே தவிர வீடுகளுக்கு தீ வைத்தபவர்களின் விபரங்கள் பற்றி பேசுவதில்லை. முடிந்தால் அந்த விபரத்தையும் அரசாங்கம் வெளியிட வேண்டும்.
கடந்த அரசாங்கம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக அறிக்கை வெளியிடுகிறார். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு செயற்படாமல், பொது இடத்தில் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் நாங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
(இராஜதுரை ஹஷான்)