Our Feeds


Thursday, April 10, 2025

SHAHNI RAMEES

35 வருடங்களின் பின் யாழ். அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வீதி திறப்பு!

 

யாழ்ப்பாணம் வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. 

அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல், பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது. 

குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும். 

வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் , இன்றைய தினம் வீதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »