Our Feeds


Thursday, April 10, 2025

Sri Lanka

வரி விதிப்பை திடீரென 90 நாட்களுக்கு இடைநிறுத்திய அமெரிக்க அதிபர் - ஏன்?



பல நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை 90 நாட்கள் இடைநிறுத்தம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.


இதனால், தைவான், ஜப்பான், தென் கொரியா உள்பட ஆசிய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை காலை முதல் ஏற்றம் கண்டு வருகின்றன.


முன்னதாக, செவ்வாய்க்கிழமை பரஸ்பர வரியை இடைநிறுத்தம் செய்ய டிரம்ப் முடிவு செய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்போது இதை வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இருப்பினும் இந்தச் செய்தியால் குறுகிய காலத்துக்குப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.


வெள்ளை மாளிகை மறுத்த 90 நாட்கள் பரஸ்பர வரி இடைநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


வரிகளை அறிவித்த பின் அதை இடைநிறுத்தம் செய்து, தனிப்பட்ட முறையில் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமே இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


பல நாட்களாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழுவும் பல்வேறு நாடுகள் மீது "பரஸ்பர" வர்த்தக வரிகளை விதிக்கும் தங்கள் முடிவில் முழு உறுதியுடன் இருப்பதாக வலியுறுத்தி வந்தனர்.


கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அன்று அதிபர் டிரம்ப் இந்த வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க பரிசீலிப்பதாக ஒரு செய்தி வெளிவந்தது. இந்தச் செய்தி பங்குச் சந்தையில் ஒரு சிறிய ஏற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தச் செய்தியை அமெரிக்க அதிகாரிகள் கேலி செய்தனர்.


ஆனால், இப்போது சில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளுடன், அந்த வரி விதிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நிஜமாகிவிட்டது. இதன் காரணமாக, உலகளாவிய பொருளாதார ஒழுங்கை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க உற்பத்தித் துறையில் பொற்காலத்தைக் கொண்டு வரப் போவதாக டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேறுவது சற்றுத் தாமதமாகும்.


அமெரிக்க அரசு முதலில் அதிக இறக்குமதி வரிகளை விதித்து, பிறகு அதைத் தற்காலிகமாக நிறுத்தி, ஒவ்வொரு நாட்டுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது தொடக்கத்தில் இருந்தே திட்டமிடப்பட்ட ஒரு செயல்தான் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.


"இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, 75க்கும் மேற்பட்ட நாடுகள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன்", என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


வெள்ளை மாளிகையின் இத்தகைய நடவடிக்கை ஆச்சரியம் தரக்கூடியது அல்ல. மேலும் அந்த அறிவிப்புக்கு முன்பு, முதலீட்டாளர்கள் பயத்தில் தங்கள் முதலீடுகளை விற்றனர், பத்திரங்களின் மதிப்பு குறைந்து சந்தை வீழ்ச்சியடைந்தது மற்றும் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்தனர். இந்த காரணிகளை அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது.


அப்படியென்றால், டிரம்பின் இந்த முடிவானது எதிர்பாராமல் நடந்த சிக்கலின் காரணமாக ஏற்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட பின்வாங்கலா? அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்தக் கூடிய பேரம் பேசும் உத்தியைப் பயன்படுத்தினாரா?


தான் எடுத்த முடிவுகளில் இருந்து டிரம்ப் ஒருபோதும் பின்வாங்க மாட்டார் என்று கூறிய அவருடைய ஆதரவாளர்கள், தற்போது இந்த இடை நிறுத்தத்தைக் கொண்டாடி வருகின்றனர்.


வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, டிரம்பின் வரி விதிப்பு நிலைமை "எதிர்பார்த்தபடியே சரியாக நடந்தது" என்று கூறினார்.


"அதிபர் டிரம்பின் செயல்பாடுகளை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவரது நடவடிக்கைகள் மூலமாக ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை அமெரிக்கா ஈர்க்கிறது" என்று செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் சில இறக்குமதி வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லை.


ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும், மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகள், ஏற்கெனவே அடிப்படை 10% அடிப்படை வரிகளுக்கு உட்படுத்தப்படாத நிலையில், இந்த வரி விலக்கு அவர்களின் நிலையை மாற்றுமா என்பதும், குறிப்பிட்ட துறைகளை இலக்காகக் கொண்ட வரிகளுக்கு இந்த வரி விலக்கு பொருந்துமா என்பதும் தெளிவில்லை.


இறுதியில், வெள்ளை மாளிகை இந்தக் கேள்விகளுக்கு சில தெளிவை வழங்கியது. ஆனால் பல மணிநேரம் அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகள் டிரம்பின் இந்த சமூக ஊடக பதிவைக் கூர்ந்து கவனித்தன. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களையும் வைத்து விவரங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.


டிரம்ப் கூறுவது என்ன?


புதன்கிழமை மதியம், டிரம்ப் பங்குச் சந்தை மோசமாக இருந்ததையும், முதலீட்டாளர்கள் கவலை அடைந்ததையும் ஒப்புக்கொண்டார். அவர் இதற்கு முன்பு பங்குச் சந்தை குறித்துப் பெருமையாகப் பேசியதற்கு இது எதிராக இருந்தது. மேலும் வரி விதிப்பு குறித்த மாற்றத்திற்கான காரணத்தையும் இது வெளிப்படுத்தியது.


புதன்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் மக்களை "அமைதியாக இருங்கள்" என அறிவுறுத்தியதோடு, "எல்லாமே சரியாக முடியும்" என்றும் உறுதியளித்தார்.


திங்கட்கிழமை, அவர் "பயந்தவர்கள்" என்று அழைத்த ஒரு குழுவைக் கடுமையாக விமர்சித்தார். தனது முயற்சிகளுக்குப் பொறுமையாக இருக்க முடியாத பலவீனமான மற்றும் முட்டாள்தனமான மக்கள்" எனக் குற்றம்சாட்டினார்.


ஆனால், இப்போது டிரம்பே தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார்.


இருப்பினும், இந்த வரி அறிவிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்றும், எந்தவொரு பொருளாதார சீர்குலைவுகளும் அமெரிக்க பொருளாதாரத்தில் பரவ அனுமதிக்கப்பட்ட ஒரு நோயைப் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் கூறினார்.


இதற்கிடையில் ஜனநாயகக் கட்சியினர் டிரம்பின் நிலைமையை அவ்வளவு நம்பிக்கையானதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும், "டிரம்ப் குழப்பத்தில் ஆட்சி செய்வதாகவும்" என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிறுபான்மையினருக்கான தலைவர் சக் ஷுமர் விமர்சித்தார்.


"அவர் தளர்ந்திருக்கிறார், பின்னடைவைச் சந்திக்கிறார், அது நல்ல விஷயம்," என்றும் அவர் கூறினார்.


இறுதியில், டிரம்பின் முடிவுக்குப் பின்னால் உள்ள சிந்தனை உண்மையில் முக்கியமற்றதாக இருக்கலாம்.


உண்மையில், இந்த வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நல்லுறவைப் பேண அமெரிக்கா முயன்று வருகிறது. தற்போதும், 10% வரியை டிரம்ப் தொடர்கிறார். இது சில வாரங்களுக்கு முன் நடந்திருந்தால், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும்.


இது பின்னடைவை ஏற்படுத்திய போதிலும், பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. மேலும், சீனாவுடன் வர்த்தகப் போரில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அவர் சீன இறக்குமதிகளுக்கு 125% வரி விதித்துள்ளார்.


அமெரிக்காவின் நடவடிக்கை, உலகப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும், இது ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோ பைடனின் வெளியுறவுக் கொள்கை உள்பட அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றதாக இருக்கிறது. ஏனெனில் இதன் மூலம் சீனாவின் லட்சியங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயல்கிறது.


இருப்பினும் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள், அமெரிக்காவின் கூட்டாளிகளை நெருக்கடியில் தள்ளியது. இது உலக ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. இப்படியான ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுப்பதை இது மேலும் கடினமாக்கியுள்ளது.


மேலும் 90 நாட்களில், டிரம்பின் இடைக்கால வரி விதிப்பு முடிவுக்கு வரும்போது, தற்போது உள்ளதைப் போன்ற பொருளாதாரச் சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை மீண்டும் தொடங்கலாம்.


ஆசிய பங்குச் சந்தையில் ஏற்றம்.


பரஸ்பர வர்த்தக வரிகள் மீதான அதிபர் டிரம்பின் வியக்கத்தக்க மாற்றத்திற்குப் பிறகு, ஆசிய-பசிபிக் பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளன.


அதிபர் டிரம்பின் இந்தத் தற்காலிகியமாக வரி விதிப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கை, ஆசிய பங்குச் சந்தைக்கான ஒரு உயிர்நாடியாக இருந்து வருகிறது. அவை "நெருக்கடியில் இருந்து நெகிழ்ச்சியான சூழலுக்கு மாறியுள்ளன" என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


உலகின் பெரும்பாலான நாடுகள் மீது டிரம்ப் அதிக வரிகள் விதிப்பதை நிறுத்தி, சீனா மீதான வரிகளை உயர்த்தியதை அடுத்து, புதன்கிழமை (ஏப்ரல் 9) வால் ஸ்ட்ரீட்டில் பங்குகள் மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டன.


இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் "மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்" என்று எஸ்பிஐ சொத்து மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டீபன் இன்னஸ் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், "சீனா மீது 125 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தாலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடி வெளிப்பட்டு நிலைமை மாறினால் அதுவும் சமாளிக்கக்கூடியதாக மாற வாய்ப்புள்ளது" என்றார்.


- பிபிசி - கலெக்டிவ் நியூஸ்ரூம்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »