Our Feeds


Wednesday, April 16, 2025

ShortNews

திசைகாட்டி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! - சஜித்


உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகள்

தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி அவ்வாறு கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பொத்துவில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 


இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியமிக்கப்படுகின்றார். அவ்வாறு இல்லாது ஜேவிபிக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்படவில்லை. 


ஜனாதிபதியானவர் கட்சி, சாதி, இனம், மதம் பாராமல் அனைவருக்கும் சமமான சேவையை வழங்க வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் அச்சுறுத்தல்களை கண்டு சளைக்க வேண்டாம். 


சமீபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பலஸ்தீன மக்கள் குறித்து அவர் கருதிய கருத்தை ஸ்டிக்கர் ஒட்டி வெளிப்படுத்தியிருந்தார். அவ்விளைஞர் பலஸ்தீன மக்கள் சார்பாக தனது கருத்துக்களை முன்வைத்த போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தினை பிரயோகித்து கைது செய்தார். 


ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முன்நின்றார். ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்தார். பலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்பட்ட சமயங்களில், பாரிய படுகொலைகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், அப்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திஸாநாயக்க குரல் எழுப்பினார். 


இன்று பலஸ்தீன மக்கள் சார்பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் குரல் எழுப்பிய சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அவருக்கு எதிரான தடுப்புக் காவலில் வைக்கும் பத்திரத்தில் கையொப்பமிடும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துள்ளார்.  


ஐக்கிய மக்கள் சக்தியிடம் இரட்டைக் கொள்கைகளும் இரட்டை நாடகங்களும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி பலஸ்தீன மக்களுக்காக நின்றது. இஸ்ரேலிய அரசும் பலஸ்தீன அரசும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் . 


ஜே.வி.பி அரசாங்கத்திற்கு பொய் சொல்லவும் ஏமாற்றவும் மட்டுமே தெரியும். அன்று தேர்தல் மேடையில் சொன்னதை இன்று செய்ய முடியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இன்று மக்களுக்கு வறுமையும், அசௌகரியமும் அதிகரித்துள்ளன.


 இவ்வாறான நிலையில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இதற்கான வலுவான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் முன்னெடுக்க வேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »