Our Feeds


Thursday, April 10, 2025

Zameera

அரபுக்கல்லூரி ஆசிரியர்கள், இமாம்களுக்கு பயிற்சி நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை

அரபுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி நிலையம் : எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் கேள்விக்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர்.!


அரபுக்கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் இல்லை. எதிர்காலத்தில் இவர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதின்கிழமை (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற  உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்பி தனது கேள்வியில், முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்துள்ள  அரபுக்கல்லூரிகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் இமாம்களுக்கும் முஅத்தின்களுக்கும் முறையான பயிற்சியைப்பெற்றுக்கொள்வதற்கான பயிற்சி நிலையம் இல்லாமையால் அவர்களின் சேவையை முறையாக மேற்கொள்ளத் தேவையான பயிற்சியினை பெற்றுக்கொள்ள இயலாமலுள்ளது. 


அதனால் அரபுக்கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு முறையான பயிற்சியை வழங்குவதற்கான பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு நடடிக்கை மேற்கொள்ளுமா எனக்கேட்கிறேன்?


இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,


அரபுக்கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களுக்கு பயிற்சி நிலையம் என ஒன்றுல்லை. இவ்வாறு முறையான பயிற்சி நிலையம் இல்லாவிட்டாலும் அரபுக்கல்லூரிகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்காக முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களமூடாக வருடாந்தம் பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன


அதேநேரம், அரபுக்கல்லூரிகளுக்கான புதிய பாடத்திட்டம் தற்போது திருத்தப்பட்டு வருகிறது. அது அனுமதிக்கப்பட்ட பின்னர் இப்பயிற்சியிப்பதை எமது கல்வி வரைபுக்குள் முறையாக இணைத்துக்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கிறோம். இந்த பாடத்திட்டம் தற்போது கல்வி அமைச்சில் இறுதி கட்டத்தில் இருக்கிறது.


அதேபோன்று முஸ்லிம் பள்ளிவாசல்களில் சேவையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கும் பயிற்சி நிலையம் ஒன்று இல்லை. அவ்வாறு இல்லாவிட்டாலும் குறித்த இமாம்கள் கல்வி கற்ற அரபு கல்லூரிகளில் தேவையான பயிற்சியை வழங்கிய பின்னர், இமாம்களை பள்ளிவாசல்களுக்கு இணைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு அவர்களின் கடமை பொறுப்பை மேற்கொள்ள சில பயிற்சிகள் கிடைக்கப்பெற்று வருகின்றன என்பதே எமது கருத்து.


புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் அரபு கல்லூரிகளின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்காக ஆசிரியர்களுக்கு மிகவும் ஆராேக்கியமான பயிற்சியை  வழக்குவதே எமது எதிர்பார்ப்பு. இதன்போது தற்போது மேற்கொள்ளப்படும் வருடாந்த பயிற்சி வேலைத்திட்டத்துக்கு மேலதிகமாக அவர்களுக்கு பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் எனது விசேட கவனம் செலுத்தப்படும் என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »