இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க
பொருட்களுக்கு பூஜ்ஜிய சதவீத வரி விதிக்க இந்தியா முன்வந்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பரஸ்பர வரியிலிருந்து விலக்கு பெற இந்தியா சார்பில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்காவில் தங்கியிருந்து அந்நாட்டு அதிகாரிகளுடன் இருதரப்பு ஒப்பந்தத்தை முடிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கட்டார் தலைநகர் தோஹாவில் நேற்று(15) பல்வேறு தொழில் அதிபர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அவர், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா பூஜ்ஜிய சதவீத வரி விதிக்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியிட்டார்.
இது குறித்து ட்ரம்ப் கூறியதாவது:
உலகிலேயே மிக உயர்ந்த வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிகமான வரி காரணமாக இந்தியாவில் விற்பனை செய்வது மிகவும் கடினமாகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்வதில் நாங்கள் முதல் 30 இடத்தில் கூட இல்லை. தற்போது அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள முன்வந்துள்ளனர். அதாவது, அமெரிக்காவின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் எந்த வரியும் வசூலிக்காத பூஜ்ஜிய வரி விதிப்புக்கு தயாராக உள்ளனர்.
மிக அதிக வரி விதிக்கும் கட்டத்தில் இருந்து இப்போது பூஜ்ஜிய வரி விதிப்புக்கு இறங்கி வந்துள்ளார். இதைத்தான் வித்தியாசம் என்று கூறுவீர்களா? கடும் நடவடிக்கையின் மூலம் உச்சகட்ட வரியிலிருந்து பூஜ்ஜிய வரிக்கு இறங்கி வந்துள்ளனர். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறையமைச்சர் ஜெய்சங்கர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது
‘‘அமெரிக்காவுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும். இதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் வரை முன்கூட்டிய எந்த அறிவிப்புகளும் வெறும் கணிப்புகள்தான்’’ என்றார்.