Our Feeds


Thursday, May 29, 2025

SHAHNI RAMEES

உறுப்பினர் நியமனத்துக்குரிய பெயர் பட்டியலை வெள்ளிக்கிழமைக்கு முதல் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு !

 

ஒருசில அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அசமந்தமான செயற்பாடு அதிருப்திக்குரியன. உறுப்பினர் நியமனத்துக்குரிய பெயர் பட்டியலை வெள்ளிக்கிழமைக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வர்த்தமானி ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதிக்காமல் தமது பொறுப்புக்களை  நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் நியமனம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் சார்பில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சகல உறுப்பினர்களும் 2023ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்கள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் 21 நாட்களுக்குள் தேர்தல் வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரத்திரட்டை அத்தாட்சிப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது. இதற்கான வழங்கப்பட்ட காலவகாசம் புதன்கிழமையுடன் (28)  நிறைவடைந்தது.

 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த நிலையில், கணிசமான அளவிலான விபரத்திரட்டுக்கள் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளன.  குறித்த காலப்பகுதிக்குள் விபரத்திரட்டை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் நியமனத்தை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதில் சிக்கல் நிலை காணப்படுகிறது.ஒருசில அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அசமந்தகரமான செயற்பாடு அதிருப்திக்குரியன.

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் பதவிக்காலம் 2025.06.02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதில்  சிக்கல் நிலை காணப்படுகிறது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது உறுப்பினர் பெயர் பட்டியலை இதுவரையில் முழுமையாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடமோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடமோ சமர்ப்பிக்கவில்லை. அரைகுறையான நிலையில் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பது இயலாததொரு விடயமாகும்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் உறுப்பினர் பட்டியல் தொடர்பான விபரங்களை 2025.05.30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு  பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 2025.06.02ஆம் திகதியன்று 339 உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலத்தையும் தொடர்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் வலியுறுத்துகிறோம் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »