சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் 100 வருடம்
பழைமைவாய்ந்த மன்னார் புத்தளம் பாதையை மூடிவிடுவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது சட்டவிராேதமான நடவடிக்கையாகும். இந்த பாதை அம்பாந்தோட்டையிலோ வேறு பிரதேசங்களிலாே இருந்திருந்தால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த பாதைையை மூடிவிட உதவி செய்திருக்காது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும் என் ஜனாதிபதியிடம் அனைத்து கட்சி மாநாட்டின்போது தெரிவித்திருந்தேன். இந்த முறையினால் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தேன். ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதன்போது பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரே தற்போது இதனை செய்ய முடியாது என தெரிவித்தார். பழைய முறையில் தேர்தலை நடத்த முடியுமான முறையில் திருத்தம் மேற்கொண்டு தேர்தலை நடத்தி இருந்தால், வெற்றிபெறும் கட்சிக்கு உள்ளூராட்சி சபையில் ஆட்சி செய்திருக்க முடிந்திருக்கும்.
அதேநேரம் பெரும்பான் இல்லாத சபைகளில் ஆட்சியமைக்க தற்போது பாரியளவில் உறுப்பினர்களுக்கு விலை பேசப்படுகிறது. கல்பிட்டியில் உள்ளூராட்சி சபை ஒன்றில் ஆட்சியமைக்க அரசாங்கத்தைச்சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சியில் ஒரு உறுப்பினருக்கு 25இலட்சம் ரூபா பேரம் பேசி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இது நல்லதல்ல. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாங்கள் அந்த மாற்றத்தை மேற்கொள்வோம்.
அத்துடன் மன்னார் புத்தளம் பாதையை திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி, பிரதமர் அந்த பகுதிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது தெரிவித்திருந்தார்கள். அந்த மக்கள் அவர்களின் வாக்குறுதியை நம்பி அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் அந்த பாதையை முற்றாக மூடிவிடுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாக கேள்விப்பட்டேன். 15 வருடங்களுக்கு முன்னர் அந்த பாதையை நாங்கள் திறந்தவிட்டபோது அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றே நீதிமன்றம் சென்று அந்த வீதியை முடிவிட நடவடிக்கை எடுத்திருந்தது. பிரதேச செயலகமே இந்த வழக்கு விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பாதையை திறந்துவிட இவர்கள் பல்வேறு இணக்கப்பாடுகளுக்கு வருவதற்கு கலந்துரையாடி வந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் ஒருதலைப்பட்சமாக நீீதிமன்றத்தில் தெரிவித்து, இந்த பாதையை முற்றாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
ஜனாதிபதி மன்னாருக்கு சென்று, இந்த பாதையை திறந்துவடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு வந்து ஒரு வாரத்துக்குள் நீதிமன்றம் இஇவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.இது பிழையான தீர்ப்பு. 100 வருடம் பழைமைவாந்த பாதை. இந்த வீதி குருணாகலையிலோ அம்பாந்தோட்டையிலோ இருந்தால் மூடி இருப்பார்களா? சிறுபான்மை மக்கள் பயன்படுத்தும் வீதி என்றதாலே சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு உடன்பட்டு இந்த பாதையை முற்றாக மூடி இருக்கிறார்கள். அதனால் மக்களின் எதிர்பார்ப்பு முற்றாக வீணாகி இருக்கிறது. ஜனாதிபதியின், பிரதமரின் வாக்கு பொய் பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.