Our Feeds


Wednesday, May 21, 2025

ShortNews

எம்.பிக்களுக்கு உயிரச்சுறுத்தல்! எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - தயாசிறி எம்.பி

 

“அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதால் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆகவே எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத் தினார். பாராளு மன்றத்தில் நேற்று (20) ஒழுங்கு விதிப் பிரச்சினையை முன்வைத்தே இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,



“பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் பெயர்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் வெளிப்படுத்தினார். எனவே, பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை அமைச்சர் வெளியிட வேண்டும். அனைவரையும் குற்றவாளியாக்க பொய்யுரைக்கக் கூடாது.



எமது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கும்போது அவதானத்துடன் இருக்குமாறு குறிப்பிடுகிறார்கள். அவ்வாறான ஆபத்தான நிலைதான் தற்போது காணப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்ட வகையில் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியின் எம்.பி. சாமர சம்பத் திட்டமிடப்பட்ட வகையில்தான் கைதுசெய்யப்பட்டார். அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் எம்.பிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.



ஆளுந்தரப்பினருக்கு பாதுகாப்பு தேவையில்லாவிடின் அவர்கள் இருக்கட்டும். ஏனெனில், அவர்களின் முகங்கள்கூட மக்களுக்குத் தெரியாது. எமது பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இதுவரையில் எதுவுமே நடக்கவில்லை. துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தற்போது சாதாரணமாகிவிட்டன. ஆகவே, எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்’’ என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »