Our Feeds


Saturday, June 14, 2025

Zameera

ஜூன் 21 முதல் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் இணைய வழியில்


 ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும்.

ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு விரிவுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாக இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், இலங்கையின் அணைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி, பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும், இதன் ஊடாக ஜனாதிபதி நிதியத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »