Our Feeds


Wednesday, June 18, 2025

Sri Lanka

கட்சிக்குள் ஒற்றுமையை பாதுகாக்காத சஜித்தின் மிரட்டல்களுக்கு நாம் அஞ்சோம் - அரசாங்கம்!


சுயாதீன உறுப்பினர்களானாலும், ஏனைய கட்சி உறுப்பினர்களானாலும் உள்ளுராட்சிமன்றங்களை முறையாக நிர்வகித்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், அதனை எம்மால் தவிர்க்க முடியாது. கட்சிக்குள் ஒற்றுமையை பாதுகாக்க முடியாத சஜித் பிரேமதாசவின் மிரட்டல்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அராசங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பொது மக்கள் அனைவரும் இரகசியமாகவே தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இவ்வாறு இரகசிய வாக்கு பதிவின் போது பிரஜைகள் யாரிடமாவது இலஞ்சம் பெற்றிருக்கின்றனரா? இல்லையல்லவா? சுயாதீனமான ஜனநாயகமான தேர்தலில் இரகசிய வாக்களிப்பும் ஒரு பகுதியாகும். இரகசிய வாக்களிப்பா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளுராட்சி ஆணையாளருக்குரியதாகும்.

கொழும்பு மாநகர மேயர் தெரிவு எந்த வகையிலும் சட்ட விரோதமானதல்ல. இறுதி நேரத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தியினர் இரகசிய வாக்கெடுப்பு வேண்டாமெனக் கூறினர்.

தேர்தலுக்கு முன்னர் இவர்கள் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணியமைப்பதாகக் கூறவில்லை. அவ்வாறிருக்கையில் தற்போது ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியமைப்பது மக்கள் ஆணையை மீறும் செயல் அல்லவா?

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிறைவடைந்து முடிவுகள் வெளியான போது சஜித் தரப்பு எழுப்பிய கோஷங்கள் இன்று சீதாவாக்கை நகரசபையிலிருந்து வெளிநடப்பு செய்யுமளவுக்குச் சென்றுள்ளது. மறுபுறம் தம்புள்ளையில் கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக 6 உறுப்பினர்கள் செயற்பட்டிருக்கின்றனர். கட்சியை ஒற்றுமையாக பேண முடியாத சஜித் பிரேமதாசவின் அலட்டல்களுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.

சுயாதீன உறுப்பினர்களானாலும், ஏனைய கட்சி உறுப்பினர்களானாலும் உள்ளுராட்சிமன்றங்களை முறையாக நிர்வகித்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், அதனை எம்மால் தவிர்க்க முடியாது என்றார்.

 (எம்.மனோசித்ரா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »