எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்களின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி தலைவருக்கு உண்டு. அவ்வாறு செயற்படாவிடின் அவர் பதவியில் இருப்பது பயனற்றது. எவ்வாறு இருப்பினும் அவரையே எதிர்க்கட்சித் தலைவராக வைத்துக் கொள்வோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மேலதிக கேள்விக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறினர்.
இதன்போது எழுந்து உரையாற்றுகையில் சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்றத்தில் சண்டித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது. பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் கோட்பாடுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மிளகாய் தூள் தாக்குதல் நடத்த இடமளிக்க முடியாது.
எதிர்க்கட்சிகளின் ஒருசில உறுப்பினர்களின் கீழ்த்தரமான செயற்பாடு மற்றும் நடத்தைகள் வெறுக்கத்தக்கது. இவ்வாறான செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விசேட கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அவர் கட்டுப்படுத்த வேண்டும் அவ்வாறு செய்யாவிடின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அவர் இருப்பது முறையாக இருக்காது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வைத்துக் கொள்வோம். பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒழுக்கமான முறையில் நடத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)