Our Feeds


Friday, June 20, 2025

Sri Lanka

காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறையை நடைமுறைப்படுத்துக - ஜனாதிபதி!


கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

காட்டு யானைகளின் பிரச்சினை அதிகமாக உள்ள அநுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து மாவட்ட செயலாளர்களால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள், வாகனத் தேவைகள் மற்றும் கடமைகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை மேலும் வினைத்திறனாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, அடுத்த மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்களை நியமிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, இதன் துரித நடவடிக்கையாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறித்த பயிற்சிகளுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு  இணைத்துக்கொள்வதற்கும்,  அதற்கான சட்டங்களை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு காண, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை முறைமைப்படுத்தவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,  பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும்  மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »