கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி
மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணின் வங்கி கணக்கிற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை வைப்பு செய்ததாக கூறப்படும் நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (16) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் “கணேமுல்ல சஞ்சீவ” கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் இணையவழி ஊடாக இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்கிற்கு பணம் வைப்பு செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக கும்பலின் தலைவரினால் சந்தேக நபருக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டதாக என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.