ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் எம்.பி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையை சுழற்சி முறையில் வழங்கும் தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் எம்.எஸ் அப்துல் வாஸித், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் உரிய நிபந்தனைகளுக்கு இணஙக சத்தியப்பத்திரம் ஒன்றை அப்துல் வாஸித் கையெழுத்திட்டு செயலாளர் நிஸாம் காரியப்பரிடம் இன்று கையளித்தார்.
இதையடுத்து அவருக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் செயலாளர் நிசாம் காரியப்பரினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு நுவரெலியாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.