Our Feeds


Sunday, June 29, 2025

Sri Lanka

செம்மணி புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம் - சீமான்!



செம்மணி தமிழர் புதைகுழிகள் மனிதப்பேரவலத்தின் உச்சம் - சிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்புக்கான மற்றுமொரு வரலாற்றுச் சான்று! உலக நாடுகள் இப்போதாவது மௌனம் கலைக்குமா? உரிய நீதியைப் பெற்றுத் தருமா? என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது

ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட மனித புதைகுழி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியையும் தருகிறது.

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த 11 சிங்கள இனவெறி ராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச்சென்ற தாய் ராசம்மா, தம்பி பிரணவன், குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டு நால்வரின் உடலும் அடுத்தநாள் வயல்வெளியில் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈழத்தமிழ் மக்களின் இதயத்தை நொறுக்கிய இக்கொடூர நிகழ்வால், பெரும் மனக்கொந்தளிப்புடன் வீதிகளில் இறங்கி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் இலங்கை இனவெறி அரசுக்குக் கொடுத்த அழுத்தம் காரணமாக 7 இராணுவ வீரர்களும், 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். கிருஷாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்ட இராணுவ வீரர்களில் ஒருவரான சோமரத்ன ராஜபக்சே இலங்கை நீதிமன்றத்தில் துணிச்சலுடன் அளித்த வாக்குமூலத்தின் மூலமாகவே முதன் முதலாக செம்மணி மனித புதைகுழிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது வாக்குமூலத்தின் படி 1995-96 ஆம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தம்முடைய உயர் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும், பத்திற்கும் மேற்பட்ட புதைகுழிகளைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு காரணமாக அவர் அடையாளம் காட்டிய இடங்கள் சிலவற்றில் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், வழக்கம்போல இலங்கை இனவெறி அரசு புதைகுழிகள் அனைத்தையும் முழுமையாகத் தோண்டி விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டது. செம்மணி மனித புதைகுழிகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் ஒரு சிலரின் உடல்களே தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஆனால், அதற்கான விசாரணையும்கூட முழுமையாக நிறைவடையவில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட சிங்கள இனவெறி ராணுவ அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் வழங்கப்படவுமில்லை. அவ்வப்போது புதைகுழிகள் தோண்டப்படுவதும், விசாரணை நடைபெறுவதும், சில நாட்கள் ஊடகங்கள் அவை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்ட பிறகு அவ்வழக்குகளும், விசாரணைகளும் நீர்த்துப்போவதும் வழக்கமான ஒன்றாகிப்போனதுதான் தமிழினத்திற்கு நேர்ந்த பேரவலம்.

கொல்லப்பட்டவர்கள் யார், யார்? ஏன் கொல்லப்பட்டார்கள்? எப்போது கொல்லப்பட்டார்கள்? எப்படிக் கொல்லப்பட்டார்கள்? யாரால் கொல்லப்பட்டார்கள்? என்று எந்த விசாரணையும் இல்லாமல், எந்த நீதியும் கிடைக்காமல் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் இனத்தில் பிறந்த ஒற்றைக்காரணத்திற்காகக் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் உடல்கள், செம்மணி புதைகுழிகளில் இன்றளவும் புதைந்து கிடக்கின்றன. மரிக்கும் முன் எழுப்பிய தங்களது இறுதி மரண ஓலங்களுக்கான நீதியானது, தமிழனாய் மரணித்த தங்களின் இறுதி பார்வைக்கான நியாயமானது, புதைக்கப்பட்ட தங்கள் எலும்புகள் முழுவதுமாய் அரிக்கும் முன்பாவது கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் மண்ணுக்கடியில், ஈழத்தாய்மடியில் அவ்வுடல்கள் காத்து கிடக்கின்றன. செம்மணி மட்டுமல்ல ஈழத்தாயகம் முழுவதுமே சிங்கள இனவெறி ராணுவத்தாலும், இனவாத இலங்கை அரசின் பயங்கரவாதத்தாலும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் நிரம்பியுள்ளன.

இன்றைக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தேடி அலைகின்ற காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்களான, பல்லாயிரம் தமிழர்களில் பெரும்பான்மையோர் இப்படி சிங்கள இனவெறி ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்தான் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத துயரம் தோய்ந்த உண்மையாகும்.

2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் கண் முன்னே 2 இலட்சம் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான முறையான விசாரணையையோ, உரிய நீதியையோ பெற முடியாமல், பன்னாட்டு அவைகளில் முட்டி மோதி முற்றாகச் சோர்ந்து போயுள்ளது தமிழினம். ஈழத்தாயக விடுதலைத்தான் பெறமுடியவில்லை குறைந்தபட்சம் இனப்படுகொலை செய்யப்பட்ட நீதியைக்கூடத் தமிழினத்தால் பெறமுடியவில்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரம். 2 இலட்சம் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையையே பெற முடியாமல், அரசியல் அதிகாரம் ஏதுமற்றுத் தவித்துப்போயுள்ள தமிழினம், யாருக்கும் தெரியாமல் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழ் மக்களுக்கான நீதியை எப்படிப் பெறப்போகிறோம்? என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து நிற்கும் நிலைதான் மற்றுமொரு பெருங்கொடுமையாகும்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணம் அருகே அரியாலை – சிந்துப்பாத்தி பகுதியிலிருந்த புதைகுழியிலிருந்து சிறு குழந்தை உட்படக் கொல்லப்பட்ட 5 தமிழர் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டது உலகத் தமிழர்களிடம் மிகப்பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஈழத்தாயக மக்கள் முன்னெடுத்த ‘அணையா தீபம்’ தொடர்ப்போராட்டத்தின் விளைவாக, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்கள், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளை நேரில் கண்டு விசாரணை மேற்கொண்டது தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது.

செம்மணி மனித புதைகுழிகள் என்பது இனவெறி இலங்கை அரசு மேற்கொண்ட கடலளவு தமிழ் இனப்படுகொலைகளில் ஒரு சிறு துளி மட்டுமே; செம்மணி போன்ற ஏராளமான மனித புதைகுழிகள் ஈழத்தாயகம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தோண்டி எடுத்து முழுமையாக விசாரித்தால் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் எத்தனை பெரிய இனப்படுகொலையை தமிழர்கள் மீது இனவெறி இலங்கை அரசு நிகழ்த்தி வந்திருக்கிறது என்பதை உலக மானுட சமூகம் அறிய முடியும். தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் போட்டு 2009 இல் 2 இலட்சம் தமிழ் மக்களைத் தம்மால் நேரடியாக இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான சுதந்திரமான நீதி விசாரணையையே நடைபெறவிடாமல் முற்று முழுதாக முடக்கியுள்ள இனவெறி இலங்கை அரசு, எவ்வித குற்றச்சாட்டும் இன்றி, எவ்வித விசாரணையும் இன்றி, எவ்வித காரணங்களும் இன்றி, எவ்வித ஆதாரங்களும் இன்றி, பல்வேறு காலகட்டங்களில், மறைமுகமாகக் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் குறித்தும், அப்படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் குறித்தும் முறையான நீதி விசாரணைக்கு ஒருபோதும் அனுமதியோ, ஒத்துழைப்போ வழங்கப்போவதில்லை.

ஆகவே, செம்மணி உட்பட ஈழத்தாயகத்தில் மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தத் தேவையான பொறிமுறையை உருவாக்கி, புதைகுழிகளை அகழாய்வு செய்து, இனப்படுகொலை குறித்த விசாரணையை அறிவியல் பூர்வமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென்று ஐ.நா.அவையின் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துகிறேன். அதன் மூலம் மட்டுமே இலங்கை அரசின் சிங்கள இனவெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்துள்ளது என்பதையும், 2009 ஆம் ஆண்டிற்கு முன்பே தொடர்ச்சியாக, மிகக்கொடூரமாக ஈவு இரக்கமின்றி தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உலக நாடுகள் அறிந்துகொள்வதற்கான மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றாக அவை அமையும்.

தமிழர்களுக்கான தனித்த இறையாண்மை கொண்ட தமிழீழத் தாயகம் அமைவது ஒன்றே நிலைத்த, சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உலகம் உணர்ந்து கொள்ளவும், ஆதரவளிக்கவும் செம்மணி புதைகுழிகள் குறித்த விசாரணை மிக முக்கிய தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித புதைகுழிகள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தக்கோரி ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!

ஈழத்தாயகத்தில் நடைபெறும் நீதிக்கான தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக இணைந்து நிற்கின்றோம்!

எங்களைக் கொன்று மண்ணில் புதைத்தாய்! – எங்கள் மண்ணைக் கொண்டுபோய் எங்கே புதைப்பாய்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »