துருக்கிய கடற்படைக் கப்பலான 'tcg büyükada' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்த இக்கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது.
இக்கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் பில்கின் பணியாற்றுகிறார்.
இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணிக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் இக்கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (15) நாட்டிலிருந்து புறப்பட உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.