Our Feeds


Friday, June 20, 2025

Sri Lanka

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்!


தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறையில் அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் தற்பொழுது ஒழுங்குறுத்தப்படாத துறைகள் சிலவற்றை ஒழுங்குறுத்துவதற்காக 1991ஆம் ஆண்டு 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் பிரிவுகள் சில தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டமூலம் 2025.05.08ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025.06.05ஆம் திகதி இரண்டாவது மதிப்புக்கு உட்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட முன்னர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாகாணங்களுக்கிடையில் இடம்பெறுகின்ற தனியார் பஸ் போக்குவரத்தை மாத்திரமே ஒழுங்குறுத்தியது என்றார்.

எனினும், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள், அலுவலக வாகனங்கள், முச்சரக்க வண்டிகள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை ஒழுங்குறுத்துவதற்கான வாய்ப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும் வகையிலும், இதற்குத் தேவையான புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலும் இச்சட்டம் திருத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நீண்டதூரப் பயணத்தில் ஈடுபடும் பஸ்கள் பயன்படுத்தும் உணவகங்களை ஒழுங்குறுத்தல், பஸ் வண்டிகளின் தரத்தை ஒழுங்குறுத்தல், வழித்தட அனுமதிப்பத்திரத்துடன் கூடிய பஸ்களை விற்பனை செய்யும்போது அதனைக் கொள்வனவு செய்யும் நபர் குறித்த அனுமதியைத் தனதாக்கிக் கொள்வதில் காணப்படும் தடைகளும் இச்சட்டத்தின் மூலம் நீக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »