பேருவளை பகுதியில் பொலிஸாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கொடிகளைத் தொங்கவிட்டிருந்த குழு ஒன்றுக்கும் பொலிஸாருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகிலுள்ள வீதியில் குழுவினர் லொறியில் ஏறி பௌத்த கொடிகளைத் கட்டிக்கொண்டிருந்ததோடு, மின்சார விளக்குகளுக்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
அந்த இடத்தைக் கடந்து சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வீதியை மறிக்க வேண்டாம் என குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது மோதலாக மாறிய நிலையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்தக் குழுவைக் கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.