Our Feeds


Sunday, June 1, 2025

SHAHNI RAMEES

கொழும்பு மாநகர சபையின் மேயராக விரெய் கெலி பல்தஸார்!



கொழும்பு மாநகர சபையின் மேயராக

விரெய் கெலி பல்தஸார் திங்கட்கிழமை (02) பதவியேற்பார். மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக  பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்று வர்த்தகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.


கொழும்பில் சனிக்கிழமை (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


உப்பு விவகாரம் தற்போது  முடிவடைந்துள்ள நிலையில் ஊடக அடக்குமுறை என்ற அரசியல் பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. ஊடகங்களை அடக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்துக்கு அமைய நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட்டால் எவருக்கும் எவ்வித பிரச்சினையும் கிடையாது.


ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில்  திரிபுப்படுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிடுகின்றன. இதனால் ஒரு தரப்பினர் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.


நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். சமூக வலைத்தளங்களில் எவரும் எதனையும் குறிப்பிடலாம் என்ற நிலைமை காணப்படுகிறது. இதனை முறையான கண்காணிக்க வேண்டும்.



உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் விரெய் கெலி பல்தஸார் நாளை பதவியேற்பார். 


மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.


கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் அரச நிதியை கொள்ளையடித்தவர்கள் இன்று சிறை செல்கிறார்கள். ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது. சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறைச்சாலையின் பெரும்பான்மையை ஊழல்வாதிகள் வெகுவிரைவில் கைப்பற்றுவார்கள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »