ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். ராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை." என்று தெரிவித்துள்ளார்.