Our Feeds


Wednesday, June 25, 2025

Sri Lanka

அரசியலமைப்புத் திருத்தமொன்று தேவை!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகையுடன், நமது நாட்டில் மனித உரிமைகள் குறித்து ஒரு கலந்துரையாடல் எழுந்துள்ளது. ஜனநாயக சமூகத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமான அம்சமாக காணப்படுகின்றன. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை, பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை, பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், இனப் பாகுபாடுகள் காட்டாமை, வன்முறையின்மை மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகள் பாதுகாப்பு போன்ற உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஜனநாயகத்தின் தனித்துவமான அம்சமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகமாகும் என்பன ஊடாக யுத்தத்திற்குப் பிந்தைய காலத்திலான நல்லிணக்கம், நட்புறவு மற்றும் ஒற்றுமையை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் அவர்களை நேற்று (24) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனவே, பெரும்பாலான அரசியல் கட்சிகள் உடன்படுகின்ற பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தெளிவான மாற்றத்தைச் செய்ய வேண்டும். இதில் திருத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆதரவை நல்கும். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் மூலம் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூணாக சுதந்திரமான ஊடகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்களால் நடத்தப்படும் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த பல்வேறு ஆணைக்குழுக்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சி அவற்றை எதிர்க்கும்.

பொருளாதார, சமூக, மத உரிமைகள், அதேபோல் இன்று அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக இருக்கும் வாழும் உரிமையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய பொருட்களின் விலைகளால், மக்களின் வாழ்வாதாரம் கூட சீர்குலைந்துள்ளது. வாழ்வதற்கான உரிமை கூட நசுக்கப்படுகிறது. உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகளை பூர்த்தி செய்து கொள்வது பிரச்சினையாக மாறியுள்ளது.

பொருட்களின் விலைகளில் ஏற்படும் சடுதியான அதிகரிப்பு, நாட்டு மக்களின் வாழ்வுரிமையைக் கூட மீறுகிறது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்நிற்கிறது. அரசியலமைப்பில் தெளிவான மாற்றம் நிகழ்ந்து, மனித மற்றும் அடிப்படை உரிமைகள் பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமை, கல்வி, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமை ஆகியவை உள்ளடங்க வேண்டும் என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »