Our Feeds


Friday, June 27, 2025

Sri Lanka

தேசிய பாதுகாப்பினை பாதுகாப்பதில் அராசங்கம் தோல்வியடைந்துள்ளது - சஜித் பிரேமதாச


ஜனநாயக நாடொன்றில் இருக்க வேண்டிய வலுவான பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தத் தவறிவிட்டது. அரசாங்கம் பல்வேறு புள்ளிவிவரங்களைக் காண்பித்தாலும், மனித உயிர்களை வெறும் புள்ளிவிவரங்களுடன் சுருக்கிக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

வியாழக்கிழமை (27) விடேச அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது கொலை கலாசாரம் பெருகியுள்ளது. உயிரிழப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களும், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளும் சமூகத்தைப் பயமுறுத்தி வருகின்றனர். இன்று சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய வலுவான பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தத் தவறிவிட்டது.

இவ்வாறு நாட்டில் இருக்கும் இளைஞர்களை நாம் இழக்கும்போது, கொலையாளிகள் மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் மனித உயிர்கள் இழக்கப்படும்போது, தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கிய அம்சமாக அமைந்து  காணப்படும் வாழும் உரிமையை உறுதி செய்யத் தவறிவிட்டது. கொலைக் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசாங்கம் பல்வேறு புள்ளிவிவரங்களைக் காட்டினாலும், இந்த மனித உயிர்களை வெறும் புள்ளிவிவரங்களுடன் சுருக்கிக் கொள்ள முடியாது.

இந்த மனித உயிர்களின் மதிப்பை பணத்தை வைத்தும் அளவிட முடியாது. கொலைகாரர்களின் அச்சுறுத்தல்களால் முழு சமூகமும் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கத்திடமிருந்து இதற்கான தீர்வுகளும் பதில்களும் தேவை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இன்று, ஐஸ் போதைப்பொருள் சமூகத்தில் பரவலாக வியாபித்து காணப்படுகின்றது. இளைஞர்கள் மட்டுமல்லாது, பாடசாலை மட்டத்திலும் கூட இந்த போதைப்பொருள் பரவி காணப்படுகிறது. இதன் காரணமாக, நாடு இளம் தலைமுறையினரை இழந்து வருகிறது. எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இவை தேசிய பாதுகாப்புக்கு கடுமையான சவாலாக அமைந்து காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில்கள் இல்லாமல் இருப்பது வருந்தத்தக்கது.

பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு காணப்படும் தட்டுப்பாடு, மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலன்புரி சார் விடயங்களில் நடக்கும் வெட்டுக்கள் போலவே மறுபுறம் கொலை கலாச்சாரத்தால் உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்படுகின்றன.

பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் சந்தர்ப்பங்களில், புள்ளிவிவரங்களை முன்வைத்து, இவை சாதாரண கொலைகள் என்று அரசாங்கம் பிரஸ்தாபித்து வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆளும் தரப்பினர் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்தனர்.

மக்களுக்கு இவ்வாறு கூறியே ஆட்சிக்கு வந்தனர். அவர்களால் முறைமையில் மாற்றத்தை கொண்டு வர முடியாது போயுள்ளது. தேசிய பாதுகாப்பு, குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வாழும் உரிமையை உறுதி செய்வதற்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »