Our Feeds


Saturday, June 21, 2025

Sri Lanka

முதலீடுகளை ஈர்ப்பதற்கான புதிய வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் - ஜனாதிபதி!



2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில், உள்நாட்டு முதலீடுகள் 21 மில்லியன் டொலர்களாலும், ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் டொலர்களாலும் அதிகரித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் இது வரை, இலங்கைக்கு 4669 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டு முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரம் மற்றும்  கிராமிய வாழ்க்கையை மேம்படுத்தும் பணியின் பெரும்பகுதி இலங்கை முதலீட்டுச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பாரம்பரிய முதலீட்டுத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாவும், ஒரு நாடாக புதிய முதலீட்டுத் துறைகளை  இனங்காணவேண்டும் என்றும், அதற்கான பொறுப்பு முதலீட்டு சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாவும்  ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு, 1978 ஆம் ஆண்டு முதல்  இதுவரை சுமார் 22 பில்லியன் டொலர் முதலீடுகளை ஈட்டவே முடிந்துள்ளதாக  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை வேகமாக முன்னேற வேண்டியுள்ளதுடன், வியட்நாம் 2022 இல் மாத்திரம் 23 பில்லியன் டொலர் முதலீட்டு இலக்கை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

முதலீடுகளை ஈர்க்கும் போது, சேவைத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தவறவிட்ட வாய்ப்புகளைப் பின்தொடர்வதைத் தாண்டி, புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதே முதலீட்டு சபையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின்  சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் மற்றும் முதலீட்டு சபையின் பதில் பணிப்பாளர் நாயகம்  ரேணுகா வீரகோன் உட்பட முதலீட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »