Our Feeds


Saturday, June 14, 2025

SHAHNI RAMEES

டெல் அவிவ் விமான நிலையம் மற்றும் இஸ்ரேல் வான்பரப்பு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.


டெல் அவிவ் விமான நிலையம் மற்றும் இஸ்ரேல்

வான்பரப்பு மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.


இஸ்ரேல் மற்றும் ஈரான் சார்ந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை காரணமாக இஸ்ரேல், ஈரான் உட்படப் பிராந்தியம் முழுவதும் வான்பரப்பில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், விமானப் பயணப் பாதைகள் மாற்றப்பட்டு ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல விமானப் பயணங்களின் காலம் நீடிக்கப்படலாம் எனவும், இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலுக்கு வர எதிர்ப்பார்க்கும் நபர்கள் தமது வருகையை மறு அறிவித்தல் வரை தாமதிக்குமாறும், இலங்கைக்குப் புறப்பட்டுச் செல்லும் நபர்களுக்கும் இந்த அறிவித்தல்கள் செல்லுபடியாகும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் வேலைத்தளங்களின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், எந்தவொரு தரப்பிலிருந்தும் ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகப் பாதுகாப்பு அறைகளுக்கு அருகாமையில் தங்கியிருக்குமாறு இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அந்நாட்டில் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரகால சூழ்நிலையில், ஆம்புலன்ஸ் சேவைகள் இயங்கும் எனவும், தூதுவராலய அதிகாரிகள் 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.


எல்லா சந்தர்ப்பங்களிலும் குடிப்பதற்குத் தேவையான நீர் மற்றும் உலர்ந்த உணவுப் பொருட்களை அருகில் வைத்துக்கொள்ளுமாறும், மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்கள் அவற்றை எப்போதும் தமக்கு அருகில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுமாறும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »