கொழும்பு மாநகரசபைக்கு மேயர் தெரிவு இதுவரை
இடம்பெறாத நிலையில், அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் தங்களின் மேயர் வேட்பாளரை அழைத்துக்கொண்டு கொழும்பு நகரை சுற்றித்திரிந்து, அவரை மேயராக அறிமுகப்படுத்தி வருவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும். அத்துடன் பிரதி அமைச்சரின் இந்த செயல் அதிகார துஷ்பிரயோகமாகும். இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகரசபையில் ஆட்சி செய்வதற்கு யாருக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், எதிர்வரும் 16ஆம் திகதி, காலை மாநகர ஆணையாளரின் தலைமையில் சபை கூடி, மேயர் தெரிவுக்காக வாக்களிப்பு இடம்பெறும். இதுதான் உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தில் இருப்பதும் இந்த நடைமுறையாகும்.
ஆனால் இதுவரை மேயர் தெரிவு இடம்பெறாத நிலையில் பிரதி அமைச்சர் ஒருவர், அவர்களின் மேயர் வேட்பாளரை கொழும்பைச்சுற்றி அழைத்துச் சென்று, இவர்தான் மேயராக தெரிவாகப்போகிறார் என ஊடங்களுக்கு தெரிவித்து வருகிறார்.
அவர்களின் மேயர் யார் என்பதை காட்டுவதற்கு கொழும்பை சுற்றி அழைத்துச் செல்ல, இது அலகு ராணி தெரிவு செய்யும் போட்டியல்ல என்பதை குறித்த பிரதி அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி மன்றம் ஒன்றில் நூற்றுக்கு 50 சதவீதம் ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத சபைகளில் தலைவர், மேயர் பதவிகளுக்கு உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்வது கொள்வது என்பதை உள்ளூராட்சி மன்ற கட்டளைச்சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் அந்த தெரிவு இடம்பெறும் தினம் வரும் வரைக்குமே நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் சட்டத்தரணியான குறித்த பிரதி அமைச்சர், சட்டம் தொடர்பில் அறிந்துகொண்டு, சட்டத்தை மதிக்காமல், மாநகரசபையால் குப்பைை எடுக்கும் இடங்களுக்கு தங்களின் மேயர் வேட்பாளரை அழைத்துக்கொண்டு, அவரை அறிமுகப்படுத்தி வருகிறார்.
இது சிறுபிள்ளைத்தனமான செயலாகும். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என ஜனாதிபதி தெரிவித்து வருகிறார். ஆனால் ஜனாதிபதியின் சீடர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயற்படுகிறார்கள் இவ்வாறானவர்கள் சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு பாதுகாக்கப்போகிறார்கள் என்பது எமக்கு புரியாமல் இருக்கிறது.
சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான பிரதி அமைச்சரே சட்டம் ஓழுங்கை முறைகேடாக பயன்படுத்துவதாக இருந்தால், எவ்வாறு நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும். பிரதி அமைச்சரின் இந்த செயல் அதிகார துஷ்பிரயோகமாகும்.
இதுதொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் இருந்த கலாசாரத்தையும் விட மோசமான கலாசாரத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார்.