பொரளை பொலிஸ் பிரிவிலுள்ள கடை ஒன்றில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்னதாக பொலிஜார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 8ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கடையில் இருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றனர். சம்பவத்தையடுத்து பொரளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, நேற்று (16) மாலை சஹஸ்புர பகுதியில், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர். இவர் இம்புல்கஸ்தெனிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த நபரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மற்றொரு சந்தேக நபர் பொரளை பொலிஸ் பிரிவின் சீவலி ஒழுங்கை பகுதியில் கைதுசெய்யப்பட்டார். கைது நேரத்தில், அவரிடம் இருந்து 11 கிராம் 115 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதானவர், பொரளை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போலி வாகன இலக்கத் தகடு, ஒரு வாள், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இவை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
