Our Feeds


Saturday, July 12, 2025

Zameera

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம்



2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

 

புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள், புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வியின் முக்கிய தூண்கள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு மூலம் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் கண்காணிக்கப்படும் விதம் தொடர்பாகவும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.

 

அத்தோடு, 21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதற்கான அடிப்படை அடித்தளத்தை அமைப்பது மற்றும் அந்த புதிய குடிமகனை நாட்டின் நிலையான தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானச் செயன்முறைக்கு பங்களிப்பாளராக மாற்றுவது ஆகியன இந்த புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.

 

கல்வி சீர்திருத்தங்கள் குறித்த அடிப்படை விளக்கத்தைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள், சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை முன்வைத்தனர். அப்போது, விசேட தேவைகள் உள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளுக்கு இந்த கல்வி மாற்றத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் குறித்து விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.

 

இந்த கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோர் உட்பட கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »