Our Feeds


Wednesday, July 16, 2025

SHAHNI RAMEES

பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

 



2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்தில்

தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயன்றதாகக் கூறி மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. 


இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. 


இன்று சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்த சாட்சியாளர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்ய மற்றொரு திகதியை வழங்குமாறு முறைப்பாட்டு தரப்பு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க நீதிமன்றத்தை கோரினார். 


இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறித்த வழக்கில் மேலதிக சாட்சி விசாரணையை ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார். 


2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய சதி செய்தமை உட்பட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு அமைய 27 குற்றச்சாட்டுகளின் கீழ் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.


குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »