Our Feeds


Thursday, July 10, 2025

SHAHNI RAMEES

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு!

 

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.


இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். போரின் குண்டுத் தாக்குதல்களால், பதுங்குகுழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலக்கீழ் பதுங்குகுழியில், விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் புதுக்குடியிருப்புப் பொலிஸார் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.


முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு நேற்று புதன்கிழமை (09) குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியைத் கிராம சேவையாளர், விஷேட அதிரடி படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார், உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றையதினம் (09) மாலை சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த பகுதிகளை பார்வையிட்டதுடன், தொடர்ந்தும் இன்று காலை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகியது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »