நமது கல்வியை நாம் மிகவும் குறுகிய விதத்திலேயே
பார்க்கிறோம் என்றும், பரீட்சை பெறுபேறுகள் மூலம் மட்டுமே கல்வியை அளவிடும் முறை மிகவும் தவறானது என்றும், அந்த முறையை மாற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் ஜூலை 13 ஆம் நாள் நடைபெற்ற உயர் கல்வியின் அடிப்படைகளை அர்த்தமுள்ளதாக்கி பிள்ளைகளின் நற்பண்புகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட பொலன்னறுவை மாவட்ட "பங்கஜ மாணவர் மாநாடு 2025" நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பொலன்னறுவை ரோயல் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் மாணவப் பிரதமர் பிரவீன் மனீஷ வத்தேகம மாணவரின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சராக பிரதமர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "பரீட்சை மையமான கல்வி முறையை மாற்றுவதன் மூலம் திறமையுள்ள பிள்ளைகளுக்கு தமது ஆற்றலினாலும் திறமையாலும் முன்னேற்றம் அடைவதற்கு தேவையான கல்வி முறையை உருவாக்குவதற்கு நாம் அர்ப்பணித்துள்ளோம்.
உணர் திறனுள்ள சமுதாயத்தை உருவாக்க நல்ல மனப்பான்மை மற்றும் உணர் திறனுள்ள குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்பதை நமது ஜனாதிபதி தொடர்ந்து கூறுகிறார். தமது பணியையும் தேவையையும் மட்டுமே நிறைவேற்றி ஒதுங்கி நிற்கும் பிள்ளைகள் அல்ல, பொது சமுதாயத்தைப் பற்றியே சிந்தித்து செயற்படும் பிள்ளைகளை உருவாக்குவதே முக்கியமானது.
இன்று இந்தக் குழந்தைகளின் படைப்பாற்றலையும் திறமையையும் பார்த்து நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நமது நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள மிகவும் திறமையான பிள்ளைகள் குழு உள்ளது என்பதை இந்த நேரத்தில் நான் கூற விரும்புகிறேன். அந்தப் படைப்பாற்றலோடு மனித நற்பண்புகளால் நிறைந்த பிள்ளையை உருவாக்குவதே நமது நோக்கம். உங்களது திறமையைப் பார்த்து நான் மேலும் தைரியமடைந்தேன். நீங்கள் தான் எங்களுக்கு வேலை செய்ய சக்தியைத் தருகிறீர்கள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு உணர்வுபூர்வமான, நல்ல மனப்பான்மையுள்ள சமுதாயத்தை உருவாக்க அர்ப்பணித்துக்கொள்வோம்." என்று பிரதமர் கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் மாணவப் பிரதமர் பிரவீன் மனீஷ வத்தேகம மாணவர்,
"சமூக அமைப்பின் சேற்றில் இருந்து அதன் சாரத்தை எடுத்து ஒரு புதிய ஒழுக்கமான தலைமுறையை உருவாக்குவதற்காக, சேற்றில் இருந்து பிறந்த தாமரை என்ற பொருள்படும் பங்கஜ என்ற பெயரால் இந்த மாணவர் மாநாட்டிற்கு பெயரிட்டுள்ளோம். மாணவர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில், உங்களிடம் மூன்று முக்கிய யோசனைகளை முன்வைக்க நான் விரும்புகிறேன்.
மாணவர் பாராளுமன்ற கருத்தை பாடசாலைகளில் பயனுள்ளதாக செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உடல் ரீதியான தண்டனைக்கு பதிலாக திறமை அடிப்படையில் புள்ளிகளை வழங்குவதோடு, தண்டனையாக அந்த திறமை புள்ளிகளை குறைப்பதற்கும் ஒரு முறையை அறிமுகப்படுத்தவும், ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி பாடசாலைகளில் பிள்ளைகளின் மனப்பான்மையை வளர்க்கும் வகையிலான வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறும் நான் முன்வைக்க விரும்புகிறேன்."
இந்த நிகழ்வில் பௌத்த மத குருமார் மற்றும் பிற மத குருமார்களும், பாராளுமன்ற சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, வீட்டுவசதி மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத், பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மசிரி பண்டார மற்றும் சுனில் ரத்னசிரி ஆகியோர், கல்லூரியின் அதிபர் ரவிலால் விஜேவன்ச உட்பட பாடசாலையின் ஆசிரியர் குழு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
