Our Feeds


Sunday, July 13, 2025

SHAHNI RAMEES

அடுத்த இரு வாரங்களுக்குள் அமெரிக்கா செல்லும் இலங்கை குழு!

 



இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள 30% வீத பரஸ்பர

வரிகளில் இருந்து மேலும் நிவாரணம் பெற ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்காவுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். 


இந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100 நாடுகளுக்கு புதிய பரஸ்பர வரிகளை அறிமுகப்படுத்திய நிலையில், இலங்கைக்கு 44% வீத பரஸ்பர வரியை விதித்தார். 


பின்னர் பல நாடுகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதன் செயல்பாட்டை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டார். 


இந்நிலையில், புதிய பரஸ்பர வரியை அமெரிக்கா கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, விதிக்கப்பட்ட புதிய வரி 30% வீதம் ஆகும். 


இந்த தீர்மானம் ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. 


இதற்கமைய, அமெரிக்காவிடமிருந்து வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள இலங்கை தீர்மானித்துள்ளது. 


குறித்த கலந்துரையாடலில் பங்கேற்க இலங்கை பிரதிநிதிகள் குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், நேற்று (12) ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். 


சம்பந்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது அமெரிக்க பொருட்களின் இறக்குமதி குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்று மங்கள விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »