கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவரவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வலியுறுத்தலுக்கு அமைவாகவே ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுவதன் உண்மையை பேராயர் வெளிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளுக்கு பேராயர் ஏமாற்றமடையக் கூடாது என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார மீட்சிக்குரிய புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை மாத்திரம் பிரதான பொருளாதாரக் கொள்கையாக அரசாங்கம் கொண்டுள்ளது.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மையை மூடிமறைக்கவே முயற்சிக்கிறது. அத்துடன் அரச அதிகாரிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கும் முயற்சிக்கிறது. இந்த கொள்கலன்களில் வெடிபொருட்கள் அல்லது ஆயுதங்கள் இருந்ததாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றி தற்போது புதிய விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்து மதத்தை சார்ந்த பிள்ளையான் சிறையில் இருந்தவாறு முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு பௌத்த சிங்கள தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர குண்டுத்தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக குறிப்பிடப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இப்ராஹிமின் இரண்டு புதல்வர்களும் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிட்டது.
கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வரவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுய சிந்தனையில் இவ்வாறு பேசுகிறாரா அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு உளறுகிறாரா என்பதை அறிய முடியவில்லை.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் அதிகார சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி உறுதி என்று மக்கள் தமது ஆணை ஊடாக உறுதிப்படுத்தியிருந்தார்கள். இவ்வாறான நிலையில் தேர்தல் வெற்றிக்காக குண்டுத்தாக்குதலை நடத்தவேண்டிய அவசியம் ராஜபக்ஷர்களுக்கு இருக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இருந்து ஊடக சந்திப்புக்களை நடத்தினார்கள். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியதாகவும், அவரது கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விருவரும் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் உண்மைத்தன்மையை பேராயர் வெளிப்படுத்த வேண்டும். யாரை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கத்தோலிக்க சபை எவ்வாறு தீர்மானிக்க முடியும். இந்த அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளுக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏமாற்றமடையக் கூடாது என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
