Our Feeds


Tuesday, July 15, 2025

SHAHNI RAMEES

முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! - அமைச்சர் சரோஜா

 


முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு

நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அதிகாரமும் எனது அமைச்சுக்கு கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டார்.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்,


“பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக வேண்டி நான் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றேன்.


முஸ்லிம் மார்க்கச் சட்டம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம்களின் பெண்கள் அமைப்புகளும் என்னுடன் சந்திப்புகளை மேற்கொண்டன.


குறித்த அமைப்புகள் என்னுடன் மாத்திரமல்லமால், கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் போன்றோருடனும் பேச்சுவார்த்தை நடத்தின.


எனது அமைச்சால் சட்டங்களை மாற்ற முடியாது. அனைத்து இனங்களும் சிறுவர்களின் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். எமது பணிகளுக்கெதிராக விமர்சனங்கள் வருகின்றன.


அதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் என்ற வகையில் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை மதிக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியின் கொள்கையின் திட்டத்துக்கமைய எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.


இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கிடையில் கர்ப்பிணிச் சிறுவர்களையும் நாங்கள் காண்கின்றோம். இதனால் திருமண வயதெல்லையை 18ஆக நிர்ணயிக்க வேண்டுமென எமது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான பேச்சுகளை தற்போது முன்னெடுத்துள்ளோம். விரிவான அடிப்படையில் அனைத்து தரப்பினருடைய கருத்துகளையும் உள்வாங்கிய பின்னர் மிக விரைவில் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவோம்.


திருமண வயதெல்லையை 18ஆக நிர்ணயிக்க வேண்டுமென்ற தீர்மானத்துக்கு அனைத்து சமூகத்தினரும் வரவேற்றுள்ளனர்” என்றார்.


(றிப்தி அலி)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »