Our Feeds


Sunday, July 27, 2025

Sri Lanka

முகம் பார்த்து எவரும் கைது செய்யப்படுவதில்லை - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!


நாட்டில் சில பிரபலமானவர்கள் கைது செய்யப்படுவது அவர்களது முகத்தையும் பின்புலத்தையும் பார்த்து அல்ல. முறையாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் ஊடாகவே இந்த கைதுகள் இடம்பெறுகின்றன. எனவே எதிர்க்கட்சிகள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது இடை நிறுத்தப்பட மாட்டாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாரும் முகம் பார்த்து கைது செய்யப்படுவதில்லை. மத்துகமவில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தன் காரணமாகவே ஜகத் விதானகேயின் மகன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். அவர் மீதான விசாரணைகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டன. அந்த விசாரணைகளுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற மற்றும் பொலிஸ் விசாரணைகளில் எந்த வகையிலும் அரசியல் தலையீடு இல்லை.

கைது செய்யப்படும் எந்தவொரு நபரும் தாம் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்ள முடியும். கடந்த சில வாரங்களாக உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்த போது எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் அக்காலப்பகுதியில் அமைதியான சூழல் காணப்பட்டது. அதன் பின்னர் சில காலம் கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் பேசிக் கொண்டிருந்தனர்.

தற்போது அதை விடுத்து மீண்டும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசத் தொடங்கியுள்ளனர். அரசாங்கத்தின் மீது எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். நாட்டிலுள்ளவர்கள் மாத்திரமின்றி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களும் கைது செய்யப்படுவர்.

இந்த செயற்பாடுகளுடன் கடந்த கால அரசியல், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ளது. அரச பொறிமுறையின் சில கட்டமைப்புக்களும் இவற்றில் தொடர்புபட்டுள்ளன. அதற்கமைய பொலிஸ், புலனாய்வு பிரிவு, நீதித்துறையை சார்ந்தவர்களும் கைது செய்யப்படலாம். எனவே இது சாதாரண விடயமல்ல. இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது எதிர்க்;கட்சிகள் அதிலும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம்.

ஆனால் நாம் அவற்றில் கவனத்தை செலுத்தாமல் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம். ஜனாதிபதி பதவியேற்று 9 மாதங்கள் கடந்துள்ளன.  9 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் பொருளாதாரத்தை ஸ்திர தன்மைக்கு கொண்டு வந்துள்ளோம். சர்வதேச நிறுவனங்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன. அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வர ஆரம்பித்துள்ளனர். இவை கடந்த அரசாங்கங்களில் காண்பிக்கப்பட்டதைப் போன்று கண்காட்சிகள் அல்ல என்றார்.

(எம்.மனோசித்ரா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »