எமது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசாங்கம் ஒரு தவணை அரசாங்கமாகும். அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம். அதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நெருங்கியுள்ளது. அரசாங்கம் தேர்தல் காலத்திலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எந்தளவு நிறைவேற்றி இருக்கிறது என்பது தொடர்பில் சுயாதீன ஆய்வு நிறுவனமான வெரிடேச் ஆய்வு நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம் குறித்த ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள அநுர மீட்டர் தளத்தில், அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் நூற்றுக்கு 5வீதமே நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி இருப்பது தெளிவாகிறது. அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த எதனையும் வழங்கவில்லை. அதேநேரம் செய்ய மாட்டோம் என்ற விடயங்களையே அதிகம் செய்துள்ளது. குறிப்பாக மக்களின் வாழ்க்கைச்செலவை குறைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதாக தெரிவித்திருந்தது. அதேபோன்று மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தேவையற்ற வரிகளை இல்லாமலாக்குவதாக தெரிவித்திருந்தது.
ஆனால் இன்று மக்களுக்கு வாழ்க்கைச் செலவை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வரிகளை அதிகரித்துள்ளது மாத்திரமன்றி புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தி மக்கள் மீீது சுமைகளை அதிகரித்துள்ளது.
அதனால் இந்த அரசாங்கம் ஒரு தவணை காலமே ஆட்சியில் இருக்கும். அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம். எமது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வெற்றிபெற முடியுமாகியது. அவ்வாறான நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, அடுத்த தேர்தலில் வெற்றிபெற நடவடிக்கை எடுப்போம். இந்த அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அநுர மீட்டர் சுழலுவதில்லை. அதனாலே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 9 மாத காலத்தில் நூற்றுக்கு 5வீதமான வாக்குறுதிகளையே நிறைவேற்றி இருக்கிறது என்றார்.
