Our Feeds


Friday, July 25, 2025

Sri Lanka

எமது பாடத்திட்டங்களில் நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை - ஹிஸ்புல்லாஹ் எம்.பி.


எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வித் திட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நாம் இன்னும் அதே பழைய கல்வித் திட்டத்தில் இருந்து வருகிறோம்.

எனினும், தற்போது கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் எமது கல்வி அமைச்சருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நேற்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய பல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாததனால், கல்வித் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு, அதிபர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது.

அதேபோன்று, அதிபர்களுக்கு மேலதிகமான எந்தக் கொடுப்பணவும் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்கள், அதிபர்களை விட அதிக சம்பளம் பெறும் நிலை காணப்படுகிறது. இதனால் அதிபர் பதவியை பொறுப்பேற்க எவரும் தயார் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அவர்களுக்கான விசேடக் கொடுப்பணை வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியும் அவருடைய வரவு செலவுத் திட்ட உரையில் இவ்விடத்தை குறிப்பிட்டிருந்தார். எனினும், இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேபோல், பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் மிகப் பழையவை. அவற்றை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி, மாணவர்களின் திறனுக்கும் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் ஏற்றவாறு மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் உரையில் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »