Our Feeds


Monday, July 21, 2025

Zameera

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் காணிகளை உரியவாறு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்


 திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புக் காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயற்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார்.

2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் ஊழியர் கூட்டுறவு வங்கியினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்துகொண்டு, உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது பிரதி அமைச்சர் மேலும் கூறுகையில், 

அபிவிருத்தித் திட்டங்கள் என்பது மக்களோடு பின்னிப் பிணைந்த ஒரு செயற்பாடாகும். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற அபிவிருத்தித் திட்டங்களால் எதனையும் சாதித்துவிட முடியாது.

இலங்கை துறைமுக அதிகார சபை என பேசும்போதெல்லாம், அங்கு மக்கள் மத்தியில், இயல்பாக எழுந்து வருகின்ற ஒரு விடயம்தான் காணிப் பிரச்சினை.

திருகோணமலை மாவட்டத்தில் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய காணிகள், மக்கள் குடியிருப்புக் காணிகள் குறித்து பல்வேறுபட்ட முரண்பாடுகள், தெளிவின்மை, விரிசல்கள் சமூகத்தில் நிலவுகின்றன. எனவே, ஒரு குறுகிய காலத்துக்குள் இந்த மக்கள் எதிர்நோக்குகின்ற காணிப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என நம்புகிறேன்.

இந்த காணிகள் தொடர்பாக ஏற்கனவே, எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் பிரகாரம், சில விடயங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஏனெனில், சட்ட வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்யவேண்டியிருக்கிறது. இல்லையேல், நாங்கள், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுவோம்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியம் என்ற விடயம் சவாலான ஒன்றாகவே காணப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் நன்மை அடையக்கூடிய புதிய திட்டமொன்று, இந்த மாதம் இறுதியில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், உயர் தரத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ், ஐந்து துறைகளில் ஏதாவது ஒரு துறையில், சிறப்பாக சித்தியடைந்த பத்து மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

சமீப காலமாக இந்த நாடு, அரசியல் கலாசாரங்களின் மூலமாகவே சீரழிக்கப்பட்டிருக்கிறது. பாதாள உலக கோஷ்டிகள், திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் என எதையெடுத்துக்கொண்டாலும், அதற்குப் பின்னால் ஒரு அரசியல் பலம் இருந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருக்கின்ற நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. உடைந்து சின்னாபின்னமாக்கப்பட்ட ஒரு நாட்டையே எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகவும் குறுகிய காலத்தில் கவிழும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இதற்காக கூட்டணிகள் அமைத்தும் இறுதியில், அவர்கள் ஏமாந்துபோனார்கள் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், அவர்,  புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவிக்கையில், 

21ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கப்பால் ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகொள்ளும், ஆளுமை படைத்த மாணவர்களை உருவாக்கி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்காளர்களாக மாற்றுவதே புதிய கல்வி சீர்திருத்தத்தின் நோக்கமாகும். 

பாடசாலை கல்விக்குள்ளே தொழில்திறன் (NVQ) பாடங்களும் இந்த புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஒரு மாணவன், கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் தொழில் உலகுக்குத் தேவையான திறனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்தோடு, அந்த மாணவன் உயர்தரப் பிரிவில் இணைந்து, கற்றலைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் முடியும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கச் செயலாளர் சரத் புர்ணிய ஸ்ரீ, இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை துறைமுக வதிவிட முகாமையாளர் சரத்குமார உட்பட துறைமுக ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »