Our Feeds


Thursday, July 31, 2025

Zameera

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு நேற்று (30) இரவு நாடு திரும்பினார். 

மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 28ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டார்.  

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி உட்பட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். 

இரு தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அதன்படி, மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொர்பான ஒப்பந்தம் என்பன பரிமாறப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மாலைதீவு மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகளிலான உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால்‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது. 

நேற்று (30) பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மரக்கன்றொன்றையும் ஜனாதிபதி நாட்டினார். 

இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த வர்த்தக மன்றத்தை சந்தித்து, உரையாற்றியதோடு மாலைத்தீவில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையைாடி இருந்தார். 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »