இலங்கையில் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எமது முதலீட்டு சபை இந்த வருடம் பாரியளவிலான முதலீட்டாளர்களை அழைத்து வந்துள்ளது. எனவே அச்சமின்றி எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கிறோம் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் விஜித்த,
எமது நாட்டை சர்வதேச நாடுகளுக்கு முன்பாக அழகானதும் வளமான நாடாகவும் மாற்ற வேண்டும். இந்த சவாலை வெற்றிக்கொள்ள அரசினால் மாத்திரம் முடியாது. இதற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். நாம் அனைவரும் இணைந்தே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள இங்குள்ள வர்த்தகர் தயாராக இருக்கிறார்கள். மேலும் கடந்த காலங்களில் முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்காக நாம் பல தீர்மானங்களை எடுத்தோம். குறுகிய காலப்பகுதிக்குள் அச்சமின்றி இலங்கைக்குள் முதலீடு செய்வதற்கான வாயப்பை உருவாக்கி கொடுத்துள்ளோம்.
குறிப்பாக எமது முதலீட்டு சபை இந்த வருடம் பாரியளவிலான முதலீட்டாளர்களை அழைத்து வந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான முதலீடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். அதேபோன்று வடமாகாணத்தில் காங்கேசன்துறை பரந்தன் உள்ளிட்ட 3 முதலீட்டு வலயங்களை புதிதாக ஆரம்பித்துள்ளோம்.
எனவே முதலீட்டாளர்களுக்கு இங்கு வந்து முதலீடு செய்யுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம். தற்போது சுற்றுலா அபிவிருத்தி வலயத்தின் ஊடாக 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் திறக்கப்பட்டுள்ளன. உலகமெங்கிலும் உள்ள இலங்கையருக்கு இந்த செய்தியை கூறுங்கள். நாம் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறோம்.
பல வருடங்களாக அந்நாடுகளில் பில்லியன், ரில்லியன் கணக்கிலும் நிதியை ஈட்டி வர்த்தகம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தற்போது தாய் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது எனவே அச்சமின்றி எமது நாட்டிற்கு வந்து முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
