Our Feeds


Saturday, July 12, 2025

SHAHNI RAMEES

இனிமேலும் இது நடக்க இடமளிக்கக்கூடாது! - ஜனாதிபதி உறுதி

 

அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச மூலதனச் செலவினம், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்து, இந்த வருட இறுதிக்குள் அந்த நிதி ஒதுக்கீட்டை உரிய முறையில் செலவிடுவதற்கும், அதன் மூலம் இந்த நிதி ஆண்டில் எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பது, அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) காலை நடைபெற்ற மாத்தறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். 

2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிறுவன மட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, இதுவரை தொடங்கப்பட்ட மற்றும் இந்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் தற்போதைய பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டன. அங்கு, விவசாயம், சுகாதாரம், கல்வி, கிராமிய அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

நில்வலா ஆற்றின் உப்புத் தடுப்பு நிர்மாணிப்பு குறித்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிப்பதற்கும், அந்த குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் பெற்றுக்கொள்வதற்கும் இங்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததுடன், மாத்தறை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியிலான திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். 

தற்போது பயன்படுத்தப்படாத மற்றும் முழுமைபெறாத அரச கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களை செயற்திறன் மற்றும் உரிய பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, அதற்கான மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

மேலும், பொல்ஹேன உத்தேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலையை நிர்மாணிப்பது தொடர்பான பரிந்துரையை தயாரித்து முன்வைக்குமாறும், அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால், இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லாத பொதுமக்கள்தான் என்றும், இனிமேலும் இது நடக்க இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »