நாட்டு மக்களுக்காக சேவையாற்றக் கூடிய அரசியல்
சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் உருவவெடுக்கும். மக்கள் வழங்கிய ஆணையை மறந்து விட்டு காலத்தை வீணடிப்பதை விடுத்து நாட்டுக்கு தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு மக்களுக்காக சேவையாற்றக் கூடிய அரசியல் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் உருவவெடுக்கும். தற்போது தொகுதிகளுக்கும் புதிய அமைப்பாளர்களை நியமித்திருக்கின்றோம். ஜே.வி.பி.க்கு போட்டி வேறு கட்சி இல்லை என்றாலும், அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளே அவர்களுக்கு போட்டியாகும்.
தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என அவர்களே தற்போது நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவே அவர்களுக்கு சவாலாக அமையும். ஏனையோர் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்து காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு மக்கள் எதற்காக ஆணையை வழங்கினர் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
எனவே முதலில் அதனை நினைவில் கொண்டு செயற்படுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். கல்வி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் வரலாறு பாடம் நீக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜே.வி.பி.யின் விருப்பத்துக்கமைய கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. உலக போக்கிற்கமைய கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றார்.