Our Feeds


Friday, August 22, 2025

Sri Lanka

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் - எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு!


சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகத்தை சந்தித்துள்ளார். வெள்ளிக்கிழமை (22) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எஸ்.சந்திரதாஸ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன் போது இரு தரப்பினரும் சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதை குறித்து கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர். சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல இலங்கைக்குக் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1950 மற்றும் 1960 தசாப்தங்களில் சிங்கப்பூர் இலங்கையின் வளர்ச்சி நோக்குநிலையைப் பின்பற்றி வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து தற்போது காணப்படுகின்ற விரைவான வளர்ச்சியை அடைந்துகொண்டது. ஆனால் இன்று இலங்கை வெற்றியின் முன்மாதிரியாக சிங்கப்பூரைப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு நாடாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று சமூக-பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதார சேவைத் துறைகளில் சிங்கப்பூர் அடைந்த முன்னேற்றத்திலிருந்து இலங்கைக்குக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து அமைச்சர் கே. சண்முகம் கருத்துத் தெரிவிக்கையில் தனது தேசம் விரைவான முன்னேற்றத்தை அடைவதற்காக நீண்டகால நோக்கத்துடன் செயல்பட்டது என்றும் அதில் சிங்கப்பூரும் கணிசமான சவால்களை எதிர்கொண்டது, தூரநோக்குத் திட்டம் மற்றும் ஆட்சி குறித்த மரபுவழி தனது நாட்டை புதிய பாதையில் கொண்டு சென்றதாவது பிரதமர் லீ குவான் யூவின் உறுதியான தலைமையும் துணிச்சலான முடிவெடுத்தலும் மூலமாக என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்கால வெற்றி தேசிய ஒற்றுமை, நிறுவன ஒருமைப்பாடு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒழுக்கமான, நீண்டகால நோக்கத்தைப் பின்பற்றுவதில் தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஒருமுறை இங்கே உறுதிப்படுத்தினார். சிங்கப்பூரின் முன்மாதிரியிலிருந்து உத்வேகம் பெறுவதன் மூலம், இலங்கைக்கு ஸ்திரத்தன்மை, செழுமை மற்றும் சமூக முன்னேற்றம் நோக்கிய நிலையான பாதையை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »