Our Feeds


Saturday, August 9, 2025

SHAHNI RAMEES

அத்துரெலிய தேரர் தப்பி ஓட்டம்…!

 


2020 இல் ஜனபல கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி, பலவந்தமாக ஆவணங்களில் கையொப்பம் பெற்று, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்ற சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை (CCD) விசாரணையை ஆரம்பித்துள்ளது.



இந்த சம்பவம் தொடர்பாக அத்துரலியே ரத்ன தேரரை கைது செய்வதற்காக, நேற்று (07) இரவு ராஜகிரியவில் உள்ள சந்தம் செவனவுக்கு பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்றுள்ளது.


ஆனால், அந்த நேரத்தில் அத்துரலியே ரத்ன தேரர் அங்கு இருக்கவில்லை, மேலும் அவரது கைபேசியும் செயலிழந்த நிலையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.


வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் அளித்த முறைப்பாட்டில், தம்மை கடத்திச் சென்று அச்சுறுத்தி, பலவந்தமாக பல ஆவணங்களில் கையொப்பம் பெற்று, தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அத்துரலியே ரத்ன தேரர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கட்டுவன, கிரிமானகொட பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் ஆவார். இவர் முன்னர் கட்டுவன நந்தசீல தேரர் என்ற பெயரில் பிக்குவாக இருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தை இவர் மற்றும் மற்றொரு சந்தேக நபர் இணைந்து மேற்கொண்டதாக தெரிகிறது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் கைபேசி தரவுகளை ஆய்வு செய்ததில், சம்பவம் நடந்தபோது அத்துரலியே ரத்ன தேரருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே அசாதாரணமான தொலைபேசி தொடர்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை அழைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர், 2024 ஜனவரி 22 அன்று பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டனர். இது பாதாள கும்பல்களுக்கு இடையிலான மோதலால் நடந்ததாக பின்னர் தெரியவந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »