Our Feeds


Wednesday, August 6, 2025

Sri Lanka

தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாய் அமர்ந்து பேசினால் உள்ளக முரண்பாடுகள் முடிவடையும் - ரிஷாட் எம்.பி.


தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உள்ளக முரண்பாடுகளை, ஒரே மேசையில், ஒன்றாய் அமர்ந்து பேச்சு நடத்தி, தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டுவந்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பிரேரணை தொடர்பில் உரையாற்றியபோதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து  தீர்வு காண முடியாது. எந்த அரசாங்கமானாலும் எமது சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்துவைக்க முயற்சிக்காது. 

கடந்தகால அனுபவங்களினூடாக  நாங்கள் புரிந்து வைத்துள்ள உண்மையே இது. ஓட்டமாவடி பிரதேச சபையை எமது கட்சியே வென்றிருந்தது. எனினும் எங்களை ஆட்சி அமைக்கவிடாமல்,   ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. 

இவ்விடயத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வு போன்று ஏனைய காணி பிரச்சினை மற்றும் கல்விப் பிரச்சினைகளில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியாது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் சமூங்களின் அக முரண்பாடுகளை பேசித் தீர்க்க முடியும். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் இழுத்தடிக்க வேண்டியதில்லை. சமூகத் தலைமைகள் இணைந்தால் இதையும் இலகுவாகத் தீர்க்கலாம்.

தனிநாடு, சமஷ்டி கோரிப் போராடிய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் உள்ளக விடயங்களை பெரிதுபடுத்தவேண்டிய  அவசியமுமில்லை. பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை.

எனவே, நமது உள்ளக பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம். தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால், எல்லா உள்ளக முரண்பாடுகளுக்கும் முடிவு கிடைக்கும் என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »