ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா, எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிகழ்வுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஆண்டு விழா தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்பது என்ற கருப்பொருளின் கீழ் அண்மைய நாட்களில் அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அணிதிரண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு விழாவில் பல அரசியல் கட்சிகளைச்சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதால், இந்தமுறை கட்சியின் 79ஆவது ஆண்டு விழாவை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் பொறுப்புக்கள் தொடர்பில் விசேட உரையாற்ற இருப்பதாகவும் தெரிய வருகிறது.
